ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அனைத்து ஊராட்சி செயலாளர்களையும் மாற்ற வேண்டும்
ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அனைத்து ஊராட்சி செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை
ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் அனைத்து ஊராட்சி செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவர் சி.என். அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். இணைத் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்ேகற்று பேசினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் கூடுதல் கலெக்டருமான பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, பயிற்சி கலெக்டர் கட்டா ரவி தேஜா, ஒன்றிய குழுத்தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்வாக முறைகேடுகள்
கூட்டத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கேற்ப திட்ட செயல்பாடுகள் குறித்தும், உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து இக்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சிகளில் திட்டங்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளது. அதை, கண்டறிந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி தாலுகா
தாட்கோ திட்டத்திலும், முத்ரா திட்டதிலும் பயனாளிகள் முறையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. வரும் காலங்களில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். மகளிர் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வருகிறது. அதில் மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரணமல்லூர் பகுதியில் தனித்தாலுகாவாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பழுதடைந்தும், சிதலமடைந்து காணப்படும் பள்ளிகளை துரிதமாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களால் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குண்டும் குழியுமான சாலை
அதைத்தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறுகையில், இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறைகள், காலதாமதங்களை தவிர்த்து தமிழக முதல்- அமைச்சர் 24 மணி நேரமும் உழைத்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். அந்த வேகத்தில் எல்லா திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றும், கடைகோடி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் நேர்மையான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story