உடைப்பு அடைக்கப்பட்டதால் குமரகுளம் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தது விவசாயிகள் மகிழ்ச்சி


உடைப்பு அடைக்கப்பட்டதால் குமரகுளம் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 Oct 2021 11:24 PM IST (Updated: 24 Oct 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி குமரகுளம் வாய்க்கால் உடைப்பு அடைக்கப்பட்டு வரத்து வாரி சீரமைக்கப் பட்டதால் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கறம்பக்குடி:
வாய்க்கால் உடைப்பு 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி- திருமணஞ்சேரி விலக்கு சாலை அருகே குமரகுளம், தென்ன திரையர் குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் இருந்து அப்பகுதியில் உள்ள சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கறம்பக்குடி காட்டாற்று தடுப்பணையில் இருந்து வாய்க்கால் மூலம் இந்த குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது குமரகுளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் குளத்திற்கு தண்ணீர் செல்லாமல் காட்டாற்றில் கலந்து வீணாது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தது
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது வாய்க்கால் உடைப்பு அடைக்கப்பட்டு வரத்து வாரியும் சீரமைக்கப்பட்டது. மேலும் பராமரிக்கப்படாமல் இருந்த காட்டாற்று தடுப்பணை மதகுகளும் மராமத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காட்டாற்று தடுப்பணையில் இருந்து மதகு மூலம் குமரகுளம் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து குமரகுளத்திற்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து குமரகுளம் நீர் பாசன சங்க தலைவர் மணிவண்ணன் கூறுகையில், கடந்த ஆண்டு நல்ல மழை பெய்த போதும் குமரகுளம், தென்னதிரையர் குளங்கள் நிரம்பவில்லை. குளம் வறண்டு கிடப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஓராண்டாக உடைப்பு சரிசெய்யப்படாததால் காட்டாற்றில் சென்று தண்ணீர் வீணானது. தற்போது உடைப்பு சீரமைக்கப்பட்டு காட்டாற்று தண்ணீர் குளத்திற்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. 
தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் குளம் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயம் தடையின்றி தொடரும் என எதிர்பார்த்து உள்ளோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாய்க்காலை சீரமைத்த பொதுப்பணித்துறையினருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என்று கூறினார்.

Next Story