தர்மபுரி வாரச்சந்தையில் ரூ50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை கோழி மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்
தர்மபுரி வாரச்சந்தையில் ரூ 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. இதேபோல் கோழி மீன் கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்மபுரி:
தர்மபுரி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. இதேபோல் கோழி, மீன் கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விற்பனை படுஜோர்
தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. தர்மபுரி பகுதியை சுற்றியுள்ள சோலைக்கொட்டாய், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் மினி லாரிகளில் ஏற்றி வந்தனர். நேற்று அதிகாலை முதல் ஆடுகளை வாங்க ஏராளமான இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் கூடினர்.
புரட்டாசி மாதம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ரூ.7,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை ரகத்துக்கு ஏற்றார் போல் வெள்ளாடுகள் விற்பனையானது. ஒரே நாளில் மட்டும் தர்மபுரி சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
அலைமோதிய கூட்டம்
தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள், தர்மபுரி நகராட்சி மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களிலும் வழக்கத்திற்கு மாறாக விற்பனை சூடு பிடித்தது. பெரும்பாலான கடைகளில் இறைச்சி வாங்க பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் நேற்று இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல், இருமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விற்பனை சூடு பிடித்தது.
Related Tags :
Next Story