கத்தியுடன் சுற்றித்திரிந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் சிறையில் அடைப்பு
கத்தியுடன் சுற்றித்திரிந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பலூர்:
கைது
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகே கடந்த 6-ந்தேதி கத்தியுடன் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்த சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரை சேர்ந்த முகமது அன்சாரியின் மகன் நவாஸ் முகமது (வயது 26), பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு புதிய காலனியை சேர்ந்த சம்பத் மகன் அருள் என்ற அருள்ராஜ் (24), வேப்பந்தட்டை தாலுகா எறையூர் காலனி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் வினோத் (19) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நவாஸ் முகமது, அருள்ராஜ், வினோத் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நவாஸ் முகமதும், அருள்ராஜூம் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மோட்டார் சைக்கிளிலேயே புதுச்சேரி மாநிலத்துக்கு சென்று தலைமறைவாகி இருந்ததும், வினோத் பெரம்பலூரிலேயே தலைமறைவாகி இருந்ததும் தெரியவந்தது. புதுச்சேரியில் செலவுக்கு பணம் இல்லாததால் அங்கிருந்து நவாஸ் முகமதும், அருள்ராஜூம் நேற்று முன்தினம் காலையில் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
தங்கச்சங்கிலி பறிப்பில்...
அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், கல்வார் கைகாட்டி அருகே வந்தபோது, முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மிரட்டி, அவர் கழுத்தில் கிடந்த சுமார் 1½ பவுன் தங்க சங்கிலியை நவாஸ் முகமதுவும், அருள்ராஜூம் பறித்து விட்டு, அங்கிருந்து தப்பித்து பெரம்பலூர் மாவட்டம் எறையூர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும், வினோத்துடன் சேர்ந்து அந்த தங்கச்சங்கிலியை விற்க பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தில் உள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு கடையின் ஊழியர்கள் தெரியாதவர்களிடம் நகை வாங்க மாட்டோம் என்று கூறியதால், 3 பேரும் கடையின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு பெரம்பலூருக்கு வந்து விட்டார்கள்.
பின்னர் நவாஸ் முகமதும், அருள்ராஜும் பெரம்பலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் அந்த தங்க சங்கிலியை விற்று ரூ.30 ஆயிரம் பெற்றுள்ளனர். அந்த பணத்தில் நவாஸ் முகமது, அருள்ராஜ், வினோத் மது அருந்தி விட்டு, அடுத்து வழிப்பறியில் ஈடுபட நேற்று காலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த போது கோனேரிப்பாளையத்தில் போலீசார் பிடித்து விட்டதாக விசாரணையில் நவாஸ் முகமது வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான நவாஸ் முகமது மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும், அருள்ராஜ் என்ஜினீயர் என்பதும், வினோத் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.18 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story