ஏற்காட்டில் 100 மி.மீட்டர் மழை பதிவு
ஏற்காட்டில் 100 மி.மீட்டர் மழை பதிவு
சேலம், அக்.25-
சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள தடுப்பணை உள்பட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஆர்வமாக குளித்தனர். ஏற்காட்டில் 100 மி.மீட்டர் மழை பதிவானது.
கனமழை
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எடப்பாடி, மேட்டூர், கந்தம்பட்டி, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதாவது 100 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பல கிராமங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கனமழையால் ஏற்காடு மலைப்பாதைகளில் ஆங்காங்கே அருவிகள் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை காண முடிந்தது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், மலைப்பாதையில் திடீரென உருவான அருவிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் குவிந்தனர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்காட்டில் பெய்த கனமழையால் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. ஏற்காடு அடிவாரம் பகுதியில் பெய்த கனமழையால் கன்னங்குறிச்சியை அடுத்துள்ள கற்பகம் கிராமத்தில் உள்ள தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். பின்னர் அவர்கள் தடுப்பணையில் செல்லும் தண்ணீரில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். அதேநேரத்தில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க அவ்வப்போது கன்னங்குறிச்சி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஏற்காடு-100, சங்ககிரி-37, பெத்தநாயக்கன்பாளையம்-36, எடப்பாடி-22, மேட்டூர்-18.4, ஓமலூர்-18, காடையாம்பட்டி-4, சேலம்-1.6, ஆத்தூர்-1.
Related Tags :
Next Story