மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது


மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
x
தினத்தந்தி 25 Oct 2021 1:52 AM IST (Updated: 25 Oct 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

மேட்டூர், அக்.25-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
மேட்டூர் அணை
கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றின் மூலம் அந்த மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் தேக்கி வைத்து கர்நாடக அரசு நீர்த்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அந்த மாநிலத்தின் தேவைக்கு போக, மீதமுள்ள தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் போது அது தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது.
அந்த வகையில் கர்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை.
பரவலாக மழை
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் மழையின் காரணமாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 650 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 4-ந் தேதி முதல் நாள்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது.
100 அடியை எட்டியது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சராசரியாக நாள்தோறும் 2 அடி வீதம் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 39 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது.
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரத்து 650 கனஅடியாக குறைந்தது. எனினும் நேற்று காலை 11.10 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 
சிறப்பு வழிபாடு
அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் இடது கரை பகுதியில் அமைந்துள்ள 16 கண் மதகுகள் பகுதியில் தேங்காயை உடைத்து, வாழைப்பழம் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி, காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாரப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் மேச்சேரி சுதாகர், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், ரகுபதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
67-வது முறை
கடந்த ஜனவரி மாதம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது. அதன்பிறகு அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் குறைந்தது. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிய நிலையில், 67-வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story