மாவு அரவை ஆலைகளில் 9½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


மாவு அரவை ஆலைகளில் 9½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Oct 2021 1:54 AM IST (Updated: 25 Oct 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவு அரவை ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் 9½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

திருச்சி
திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு வட்டம் ஆகிய பகுதிகளில் பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்தி மாவாக அரைத்து விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் சோதனை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மேற்படி பகுதிகளில் உள்ள மாவு அரைக்கும் ஆலைகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்ட தனி தாசில்தார்கள் அடங்கிய குழு, பறக்கும் படை துணை தாசில்தார் மற்றும் திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து நேற்று சோதனை மேற்கொண்டனர்.
9½ டன் அரிசி பறிமுதல்
திருச்சி கிழக்கு வட்டம் அரியமங்கலம் பகுதியில் உள்ள அன்வர் பிளவர் மில்லில் ரேஷன் அரிசி கலந்த 7,650 கிலோ குருணை அரிசி மற்றும் குருணையாக அரைக்க தயாராக இருந்த 120 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும் திருச்சி மேற்கு வட்டம் உறையூர் பகுதியில் அனுமதியின்றி சிவனேசன் என்பவருக்கு சொந்தமான மில்லில் 1,500 கிலோ உடைத்த ரேஷன் அரிசி மற்றும் 210 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 9,480 டன் அரிசி கைப்பற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேற்கண்ட 2 மாவு அரைக்கும் மில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்புடைய உரிமையாளர்கள் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story