தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஆபத்தான பயணம்
கிருஷ்ணகிரி பகுதியில் பெங்களூரு, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, குப்பம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பலர் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து சென்று சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கிருஷ்ணகிரி.
அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுமா?
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த ஆஸ்பத்திரி, படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இ்ங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் விபத்தில் சிக்கி வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி, சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே இந்த அரசு ஆஸ்பத்தி்ரி தரம் உயர்த்தப்பட்டால் இந்த பகுதி மக்களுக்கு பேரூதவியாக இருக்கும். இதுதவிர குழந்தைகள் நல சிறப்பு டாக்டரும் நியமிக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.
குப்பைத்தொட்டி இல்லை
சேலம் கிச்சிப்பாளையம் 44-வது வார்டு கோவிந்தசாமி நகர் குப்பைமேடு பிரதான சாலையில் குப்பைத்தொட்டி இல்லை. எனவே அந்த பகுதி மக்கள் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழைக்காலம் என்பதால் குவிந்துள்ள குப்பையால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிச்சிப்பாளையம், சேலம்.
ஆபத்தான மின்கம்பம்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா உம்பலிக்கம்பட்டி கிராமத்தில் மின்சார கம்பத்தை நடுதெருவில் வைத்து கழிப்பறை கட்டி உள்ளனர். இதனால் மின் கம்பம் எந்நேரமும் உடைய வாய்ப்பு உள்ளது. மின்கம்பத்தை எந்த நேரத்திலும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், உம்பலிக்கம்பட்டி.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் மழைநீரால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பொதுக்கழிப்பிடம் உள்ளதால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுகிறது. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-க.காளிதாஸ், சேலம்.
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை, சத்யா நகர் ரெயில் ரோடு அருகில் சாலை வசதி மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீருடன் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி மையமாக அந்த பகுதி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
- இரா.விஜய், சத்யா நகர், சேலம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, படவீடு பேரூராட்சிக்கு உட்பட்ட ராசிபுராத்தானூர் கிராமம் பகுதியில் சரியான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு அருகில் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் தொல்லையும் அதிகமாகிவிட்டது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவுநீர் கால்வாய்க்கு சரியான வடிகால் அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், நாமக்கல்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா, குண்டல அள்ளி கிராம பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல தேங்கி காட்சி அளிக்கிறது. மேலும் அதிக மழை பெய்தால் மழைநீர் வெளியேற வழியில்லாததால் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விஷப் பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், குண்டல அள்ளி, தர்மபுரி.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. தெருநாய்கள் குறுக்கே செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கிறது. மேலும் வாகனத்தில் வருபவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. எனவே தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.
க.ரவிசங்கர், கெங்கவல்லி, சேலம்.
எரியாத மின்கோபுர விளக்கு
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை சந்தைத்தடம் பஸ் நிறுத்தத்தில் மின்கோபுர விளக்கு உள்ளது. இது கடந்த ஒரு வார காலமாக எரியவில்லை. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பெறும் அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கோபுர விளக்கு எரியச் செய்ய வேண்டும்.
-சிவா, சந்தைத்தடம், சேலம்.
வேகத்தடைகளில் ஒளிரும் விளக்குகள்
கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலையில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளன. இந்த சாலைகளில் உள்ள வேகத்தடைகள் பல இடங்களில் தெரிவதில்லை. இரவு நேரத்தில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பலரும் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கிறார்கள். எனவே வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும். மேலும், இரவிலும் ஒளிர கூடிய விளக்குகள் பொருத்த வேண்டும்.
-குமார், கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story