பனாமா நாட்டு சரக்கு கப்பல் மீது 2 பிரிவுகளில் வழக்கு


பனாமா நாட்டு சரக்கு கப்பல் மீது 2 பிரிவுகளில் வழக்கு
x
தினத்தந்தி 25 Oct 2021 2:28 AM IST (Updated: 25 Oct 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் குமரி மீனவர்கள் விசைப்படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பனாமா நாட்டு சரக்கு கப்பல் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளச்சல்:
நடுக்கடலில் குமரி மீனவர்கள் விசைப்படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பனாமா நாட்டு சரக்கு கப்பல் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
படகு மீது கப்பல் மோதல்
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 17 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
குளச்சலில் இருந்து சுமார் 19 நாட்டிக்கல் மைல் தொலைவில் இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு சென்ற பனாமா நாட்டு சரக்கு கப்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது.
காயம்
இந்த விபத்தில் விசைப்படகில் சேதம் ஏற்பட்டதுடன், மோதிய வேகத்தில் படகில் இருந்த மீனவர்கள் அங்குமிங்கும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மேலமணக்குடியை சேர்ந்த அருள்ராஜ், குளச்சலை சேர்ந்த ஜான் ஆகிய 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மீனவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து நடந்ததும் படகை ஓட்டிய ரூபன் ரோஸ் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டது என தெரிவித்தார். பின்னர் இந்திய கடலோர காவல் படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மீனவர்களை மீட்டு கொச்சி துறைமுகத்திற்கு விரைந்தனர். 
விபத்துக்கு காரணம்
மற்ற மீனவர்கள், அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்களின் விசைப்படகு மூலம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதில் சிலர் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குமரி மாவட்ட கடற்கரை மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சரக்கு கப்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே சரக்கு கப்பல் கவனக்குறைவாக வந்து மோதியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த சரக்கு கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நோவியாஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் என்பதும் தெரியவந்தது.
கப்பல் மீது வழக்கு
மேலும் இந்த சம்பவம் குறித்து விசைப்படகை ஓட்டி சென்ற ரூபன் ரோஸ் அளித்த புகாரின் பேரில் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பனாமா நாட்டு சரக்கு கப்பல் மாலுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 280, 337 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story