உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்
கிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
பெங்களூரு:
ஸ்மார்ட் குழந்தை
சாதனை புரிவதற்கு வயது ஒரு அளவு கோல் கிடையாது. ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை சாதிப்பவர்களை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அப்படி பெங்களூருவை சேர்ந்த 6 வயது சிறுவன், உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரை பற்றி இங்கே பார்ப்போம்:-
பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வருபவர் ஸ்ரீவிஜய். இவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி, கம்ப்யூட்டர் என்ஜீனீயர். தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டார். இவர்களது மகன் தருண்(வயது6). சிறுவன் தருண் 2 வயதாக இருந்தபோது, அவருக்குள் இருக்கும் திறமைகளை அவரது தாயார் கண்டுபிடித்தார். 14 மாத குழந்தையாக இருந்தபோது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு ‘‘ஆசிய ஸ்மார்ட் குழந்தை’’ என்ற விருது கிடைத்தது. அவருக்கு அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதும் கிடைத்தது. சுயமாக கற்றலில் திறன் படைத்த தருண், அதற்காக இந்திய புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பிடித்தார்.
கிராபிக் டிசைனர்
சர்வதேச அளவில் நடைபெற்ற விண்வெளி தொடர்பான போட்டியில் பங்கேற்ற தருணுக்கு 59-வது இடம் கிடைத்துள்ளது. இப்படி 5 வயதுக்கு உள்ளாகவே அந்த சிறுவன் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்த வரிசையில் இளம் சாதனையாளர் தருண் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கிராபிக் டிசைனர், விண்வெளி கோள்கள் குறித்த படங்களை வரைதல், ஆன்லைனில் விளையாட்டுகளை சுயமாக உருவாக்குதல் மற்றும் அனைத்து வகை திறனையும் வௌிப்படுத்தியதற்காக இந்த இடம் தருணுக்கு கிடைத்துள்ளது.
சிறுவன் தருண், விண்வெளி மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகிறார். 14 மாத குழந்தையாக இருந்தபோது விண்வெளியில் உள்ள பொருட்களை அடையாளம் காண தொடங்கியுள்ளார். படிப்படியாக அவர் அறிவியல் சார்ந்த விஷயங்களை கற்று, தனது 3-வது வயதில் அனிமேஷன், ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்க தொடங்கினார்.
இஸ்ரோ தலைவர் பாராட்டு
தற்போது தருண், உலகின் மிக இளம் வயது கிராபிக் டிசைனர், கிரியேட்டிவ் விண்வெளி டிசைனர், ஆன்லைன் விளையாட்டு உருவாக்குபவராக திகழ்கிறார். இதற்காகத்தான் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் (வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு) தருணின் பெயர் இடம் பெற்றுள்ளது. தருண் தற்போது எம்.எஸ். பெயிண்ட், 3டி அனிமேசன் மற்றும் பல்வேறு மென்பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
அவர் இதுவரை 80 கிராபிக் படங்களை வரைந்துள்ளார். அதை பார்க்கும்போது, இது 5 வயது குழந்தை தான் உருவாக்கியதா? என்று சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளது. அவ்வளவு நேர்த்தியாக அவற்றை வரைந்துள்ளார். விண்வெளித்துறையில் தருணுக்கு உள்ள ஆர்வத்தை கண்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார்.
அனிமேஷன் படங்கள்
இதுகுறித்து தருணின் தாயார் வசந்தி கூறியதாவது:-
தொடக்கத்தில் நாங்கள் மலேசியாவில் வசித்தோம். எனது கணவர் அங்கு பணியாற்றுகிறார். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். தருண் பிறந்த பிறகு அவரது எதிர்காலம் கருதி நான் வேலையை விட்டுவிட்டு, பெங்களூருவுக்கு வந்துவிட்டேன். அறிவியல் துறையில் தருணுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.
ஒரு முறை இஸ்ரோ தலைவரை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது குழந்தையை அவர் பாராட்டினார். தருண் சுயமுயற்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார். அனிமேஷன் படங்கள், விண்வெளி குறித்த கிராபிக்ஸ் படங்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வரைந்துள்ளார். அதனால் தான் உலக சாதனை புத்தகத்தில் தருணின் பெயரை சேர்த்துள்ளனர். குழந்தைகள் தினத்தன்று கவர்னரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களுக்கு தகவல் வந்துள்ளது.
இவ்வாறு வசந்தி கூறினார்.
Related Tags :
Next Story