ஆட்டு ரோமங்களால் ஆன கம்பளியை போட்டுக்கொள்ள தகுதி வேண்டும் - பசவராஜ் பொம்மை பேச்சு


ஆட்டு ரோமங்களால் ஆன கம்பளியை போட்டுக்கொள்ள தகுதி வேண்டும் - பசவராஜ் பொம்மை பேச்சு
x
தினத்தந்தி 25 Oct 2021 3:03 AM IST (Updated: 25 Oct 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டு ரோமங்களால் ஆன கம்பளியை போட்டுக்கொள்ள தகுதி வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

பல்வேறு திட்டங்கள்

  கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிந்தகி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

  ஆட்டு ரோமங்களால் உருவாக்கப்படும் கம்பளியை யார் வேண்டுமானாலும் போட்டு கொண்டால் அதற்கு உரிய மரியாதை வந்துவிடாது. அந்த கம்பளியை போட்டு கொள்ள தகுதி வேண்டும். ஹாலுமத (குருப) சமூகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு மட்டுமே அதை தோள் மேலே போட்டுக்கொள்ளும் தகுதி உள்ளது. கனகதாசர் பிறந்த இடமான காகினெலே சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

5 லட்சம் வீடுகள்

  வட கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்துவது, கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவது, வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளித்துள்ளோம். நடப்பு ஆண்டில் கூடுதலாக 5 லட்சம் வீடுகளை கட்ட முடிவு செய்துள்ளது. அதில் சிந்தகி தொகுதிக்கு மட்டும் 7 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்படும்.

  சமூகநீதி குறித்து அடிக்கடி பேசும் காங்கிரஸ் தலைவர்கள், யாருக்கும் சமூகநீதியை நிலைநாட்டவில்லை. அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்தது. சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள் கல்வி பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அது பா.ஜனதாவால் மட்டுமே சாத்தியம். வரும் நாட்களில் இந்த தொகுதி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story