மனைவிக்கு ஊசி போட்டு கொன்ற அரசு டாக்டர் கைது
தாவணகெரேவில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவருக்கு ஊசி போட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அரசு டாக்டரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தாவணகெரே:
அரசு டாக்டர்
தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகா ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னேசப்பா(வயது 45). டாக்டர். இவரது மனைவி சில்பா(36). இவர்கள் இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில்பா ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு அவர் தனது கணவருடன் தாவணகெரேவில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது டாக்டர் சன்னேசப்பா, பெலகுத்தி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த பல மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். மேலும் மது, சூதாட்டம் போன்றவற்றிற்கும் அடிமையானதாக கூறப்படுகிறது.
ஊசி செலுத்தினார்
இதன்காரணமாக வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சில்பா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சன்னேசப்பா சிகிச்சை அளித்தார். அப்போது அவர் தனது மனைவிக்கு ஊசி செலுத்தினார். அதையடுத்து சில்பா மயக்கம் அடைந்தார். பின்னர் இதுபற்றி சில்பாவின் பெற்றோருக்கு சன்னேசப்பா தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அவர்கள் மகளின் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அப்போது சில்பா மயக்க நிலையில் இருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் சன்னேசப்பா அழைத்துச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பினார். அப்போது காரில் சில்பா பிணமாக கிடந்தார்.
போலீசில் பெற்றோர் புகார்
அதைப்பார்த்து சில்பாவின் பெற்றோர் கதறி அழுதனர். அவர்களிடம் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சில்பா இறந்துவிட்டதாக சன்னேசப்பா கூறினார். அதை நம்பாத சில்பாவின் பெற்றோர் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நியாமதி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சில்பாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் அவருக்கு அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் ‘டெக்சாமெத்தாசோன் ஸ்டீராய்டு’ எனும் மருந்தை செலுத்தி இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. அதனால்தான் அவர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கைது
இதையடுத்து போலீசார் டாக்டரான சில்பாவின் கணவர் சன்னேசப்பாவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவருக்கு அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் மருந்தை செலுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் சன்னேசப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தாய் கொல்லப்பட்ட நிலையில், தந்தை சிறைக்கு சென்றுவிட்டதால் அவர்களது 2 பிள்ளைகளும் அனாதையாகி விட்டன. அவர்களை சில்பாவின் பெற்றோர் அழைத்துச் சென்று பராமரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story