நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்
கூடலூரில் நடுவழியில் அரசு பஸ் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்
கூடலூர்
கூடலூரில் நடுவழியில் அரசு பஸ் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பழுதடைந்த பஸ்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பஸ்களே இயக்கப்படுகிறது. இதற்கு கூடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் போதிய உதிரிபாகங்கள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பஸ்கள் நடுவழியில் பழுதாகி நின்று பயணிகளை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
கடந்த சில நாட்களில் மசினகுடி, 1-ம் மைல், ஆரோட்டுப்பாறை ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றன. தற்போது 4-வது முறையாக ஒரு பஸ் நடுவழியில் பஞ்சராகி நின்ற சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
பயணிகள் அவதி
அதாவது நேற்று மதியம் 2.30 மணிக்கு கூடலூரில் இருந்து மண்வயல் வழியாக போஸ்பாராவுக்கு பயணிகளுடன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. மண்வயல் பஜாரை கடந்தபோது திடீரென நடுரோட்டில் டயர் பஞ்சராகி நின்றது. அந்த பஸ்சில் வேறு டயரும் இல்லை.
மேலும் பஞ்சரான டயரை கழற்ற கருவிகளும் இல்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கூடலூர் கிளை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு சம்பந்தப்பட்ட துறை உதிரி பாகங்கள் மற்றும் தளவாட பொருட்களை சரியாக வழங்குவது இல்லை. இதனால் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் அரசு பஸ் பழுதாகி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story