முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்
நீலகிரியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊட்டி
நீலகிரியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை, குறைகளை மனுக்களாக அளித்தனர். அவ்வாறு வந்தவர்களில் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 140 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முன்னாள் ராணுவ வீரர்கள்
நீலகிரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எங்களுக்கு சரிவர வேலை கிடைப்பதில்லை. சிலருக்கு அரசு வேலை கிடைக்கிறது. நீலகிரியில் தனியார் நிறுவனங்கள் இல்லை. வேலை இல்லாததால் நாங்கள் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
எனவே, எங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிலருக்கு புதிய வீடு கட்ட அனுமதி கேட்டு மாதங்கள் கடந்தும் எந்த பதிலும் இல்லை. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முதியோர் உதவித்தொகை
கோத்தகிரி அருகே திம்பட்டி, கடக்கோடு, கீழ் அணையட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 7 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. 2 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. மற்றொரு கட்டிடம் விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏதுவாக கட்டிடத்தை சீரமைப்பதோடு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
Related Tags :
Next Story