வைகை அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு
தொடர் மழை எதிரொலியாக வைகை அணையின் நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.
மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுகிறது. இந்தநிலையில் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேகமலை, போடி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 8 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 58.66 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,319 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டாலும், பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story