பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள். கண்டித்த டிரைவரிடம் வாக்குவாதம்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை கண்டித்த டிரைவரிடம், மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை கண்டித்த டிரைவரிடம், மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆபத்தான முறையில் பயணம்
காட்பாடியில் இருந்து அரசு டவுன் பஸ் நேற்று காலை பயணிகளை ஏற்றி கொண்டு பாகாயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் காலியாக காணப்பட்ட இருக்கையில் அமராமல் ஆபத்தான முறையில் பின்பக்க வாசல் படியில் தொங்கியபடியும், அதன் அருகே உள்ள ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியப்படியும் பயணம் செய்தனர். இதைக்கண்ட கண்டக்டர் உடனடியாக மாணவர்களை பஸ்சின் உள்ளே வரும்படி கூறினார். ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து அதேபோன்று பயணித்தனர்.
இதற்கிடையே பழைய மீன்மார்க்கெட் - தெற்கு போலீஸ் நிலையம் இடையேயான பகுதியில் பஸ் சென்றபோது சாலையோரம் வைத்திருந்த தக்காளி கூடையின் மீது படிக்கட்டில் தொங்கிய மாணவரின் கால் பட்டத்தில் தக்காளி கீழே கொட்டியுள்ளது. இதனை பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்த டிரைவர் வேலூர் பழைய மாநகராட்சி பஸ்நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தினார்.
டிரைவரிடம், மாணவர்கள் வாக்குவாதம்
பின்னர் அவர், பின்பக்க வாசலுக்கு வந்து மாணவர்களிடம் பஸ்சின் உள்ளே வந்தால் தொடர்ந்து பயணம் செய்யலாம். அல்லது பஸ்சை விட்டு இறங்கும்படி கண்டிப்புடன் கூறினார். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சின் பின்னால் சில வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். அப்போது டிரைவர், மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால் நாங்கள் தானே பொறுப்பாக முடியும். பஸ்சின் உள்ளே வரும்படி கூறினால் திட்டுவதாக கூறினார். இதையடுத்து போலீசார் அந்த மாணவர்களை அழைத்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று அறிவுரை கூறி அதே பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story