கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்


கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்
x
தினத்தந்தி 25 Oct 2021 10:19 PM IST (Updated: 25 Oct 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவிலில் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொறையாறு:
செம்பனார்கோவிலில் கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிணமாக கிடந்த ஊழியர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22) என்பவர் கடந்த 2 மாதங்களாக  மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு முதல் அரவிந்தனை காணவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 
இதுதொடர்பாக செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கேட்டரிங் சர்வீஸ் அலுவலக மாடியில் துர்நாற்றம் வீசுவதாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அலுவலக மாடியில் அரவிந்தன் பிணமாக கிடந்தார். அவரது அருகில் 2 பூச்சி மருந்து (விஷம்)  பாட்டில்கள் கிடந்தது.
போலீசாருடன் வாக்குவாதம்
அரவிந்தன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள்  100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
அப்போது கேட்டரிங் அலுவலக உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன், அரவிந்தனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். 
சாலை மறியல்
இதையடுத்து அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் அரவிந்தன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி உள்பட பலர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அரவிந்தன் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story