கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்
கோர்ட்டு உத்தரவின்படி முககவசம் அணிய கட்டாயப்படுத்தக்கூடாது. முககவசம் அணிய மாட்டேன் என்று ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வாலிபர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
கோர்ட்டு உத்தரவின்படி முககவசம் அணிய கட்டாயப் படுத்தக்கூடாது. முககவசம் அணிய மாட்டேன் என்று ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வாலிபர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்ததை தொடர்ந்து அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடைவிதித்து அறிவித்தது. இதன்படி தமிழகத்தில் அரசின் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படாமல் மனுக்கள் பெட்டிகளில் போட வைத்து தீர்க்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய கலெக்டர் சங்கர்லால் குமாவத் பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டம் என்பதால் ஏராளமானோர் தங்களின் குறைகள் அடங்கிய மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.
மனு
இவ்வாறு மனு கொடுக்க வந்தவர்களை அரசின் வழி காட்டுதல் நெறிமுறைபடி முககவசம் அணிந்தபடிதான் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த யாசர் அராபத் என்பவர் சில பெண்களுடன் தங்களின் கோரிக்கை குறித்து மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் முககவசம் அணிந்துதான் மனு அளிக்க வேண்டும் என்று கூறினர்.
இதனை கேட்ட அந்த நபர் தான் முககவசம் அணியமுடியாது என்றும் முககவசம் அணிய யாரும் தன்னை கட்டாயபடுத்தக்கூடாது என்றும் கூறி காரசாரமாக வாதிட்டார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரவு
இதனை தொடர்ந்து மனுவை கொடுத்த யாசர் அராபத் தன்னை கூட்ட அரங்கில் அதிகாரிகள் முககவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். யாரும் யாரையும் முககவசம் அணிய நிர்பந்திக்கக்கூடாது என்று கவுகாத்தி மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் நிர்பந்திக்கிறீர்கள். இது சட்ட விரோதம் என்று கலெக்டரிடம் வாதிட்டார். இதனை கேட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் முககவசம் அணிவது கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக. அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி உங்கள் நலனுக்காக மட்டுமின்றி அனைவரின் நலனுக்காக முககவசம் அணிந்து ஒத்துழையுங்கள் என்று அறிவுரை கூறினார்.
பரபரப்பு
அதற்கு யாசர் அராபத் தான் முககவசம் அணியமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி சென்றுவிட்டார். முககவசம் அணியமாட்டேன் என்று கலெக்டரிடம் வாலிபர் வாதிட்ட சம்பவத்தால் குறைதீர் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story