ஏரிக்கு வரும் தண்ணீர் அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


ஏரிக்கு வரும் தண்ணீர் அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Oct 2021 10:38 PM IST (Updated: 25 Oct 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ஏரிக்கு வரும் தண்ணீர் அடைக்கப்பட்டதை கண்டித்து, பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, நெல்சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்,  தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் இருந்து ராகவன் வாய்க்கால் வழியாக திருவெண்ணெய்நல்லூர் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

தண்ணீரை அடைத்தனர்

இதற்கிடையே ஏரியை ஆக்கிரமிப்பு செய்து, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏரிக்கு தண்ணீர் வந்தால் பயிர்தண்ணீரில் மூழ்கி விடும் என்று கருதி, ராகவன் வாய்க்காலில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய பாதையை பலகையை கொண்டு அடைத்து மூடிவிட்டனர். இது, பெரிய ஏரியின் மூலம் பாசனவசதி பெறும் நிலங்களின் விவசாயிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

இது             குறித்து விவசாயிகள் மாவட்ட கலெ்கடர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து, ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியில் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை

இதையடுத்து பெரிய ஏரி பாசன விவசாயிகள் நேற்று ஒன்றிணைந்து திருவெண்ணெய்நல்லூர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தை நடத்தினர்.

இதுப்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன் பேரில், அனைவரும் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 இதற்கிடையே போலீஸ் பாதுகாப்புடன், ஏரிக்கு வரும் வாய்க்காலில் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டு இருந்த பலகை உள்ளிட்டவற்றை பாசன விவசாயிகள் அகற்றினர். இதையடுத்து, ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story