பேரூராட்சிகளில் 42 பரப்புரையாளர்கள் பணி நீக்கம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றி வந்த 42 பரப்புரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பரப்புரையாளர்கள் கலந்து கொண்டு கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சுகாதார விழிப்புணர்வு
கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 42 பேர் கடந்த 2017-ம் ஆண்டு பரப்புரையாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டோம். நாங்கள் வார்டுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம்.
இந்நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டோம். பின்னர் மீண்டும் கடந்த மாதம் 1-ந்தேதி வேலையில் சேர்த்துக்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டது. இதை கொண்டு சென்று பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் காண்பித்த போது, அவர்கள் எங்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை.
வேலை வழங்க வேண்டும்
இதுபற்றி எங்களை பணி அமர்த்திய தனியார் நிறுவனத்தை அணுகினோம். அதற்கு அவர்கள் கடலூர் மண்டல பேரூராட்சி அலுவலகம் மூலம் பணி ஆணை வரும் என்று, அவர்கள் வழங்கிய பணி ஆணையை வாங்கிக்கொண்டனர். ஆனால் இது வரை எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். ஆகவே பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கி, எங்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story