209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
பண்ருட்டி சின்ன ஏரியில் உள்ள 209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் வசிப்பவர்கள், தங்களுக்கு மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கடலூர்,
பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு புதுநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை நுழைவு வாயிலில் நின்ற போலீசார் தடுத்து, நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து தெரு முக்கிய நிர்வாகிகள் மட்டும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
209 குடும்பத்தினர்
பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்து மேடு டைவர்ஷன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளாக 209 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் சிமெண்டு சாலை, தெரு மின் விளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் நகராட்சி மூலம் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். அந்த நோட்டீசில் நாங்கள் வசிக்கும் பகுதி சின்ன ஏரிக்குட்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தான் அது ஏரி பகுதி என்று எங்களுக்கு தெரியும்.
மாற்று இடம்
எங்களை திடீரென காலி செய்ய சொல்வதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆகவே எங்களுக்கு பண்ருட்டி நகராட்சி பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். இலவச மனைப்பட்டாவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story