ஆட்டுக்கல் அம்மிக்கல் தொழிலாளர்கள் திடீர் தர்ணா
ஊத்துக்குளி பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதிக்கக்கோரி ஆட்டுக்கல், அம்மிக்கல் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
ஊத்துக்குளி பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதிக்கக்கோரி ஆட்டுக்கல், அம்மிக்கல் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணா
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை கோரி 839 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊத்துக்குளி ஒன்றிய ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிப்பு தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் எல்.பி.எப். பனியன் சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வெளிப்புற நுழைவுவாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து உள்ளே சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஆட்டுக்கல்
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஊத்துக்குளி தாலுகா கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெத்தம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, மொரட்டுப்பாளையம், திம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சேடர்பாளையம் பகுதிகளில் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி, பூண்டுக்கல் மற்றும் கிரைண்டர் கல் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கற்களை வெட்டி எடுக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத, தொழிலை நாங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பாறை வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளதால் கோவையில் கிரைண்டர் தயாரிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.கொரோனா மற்றும் கடந்த 5 மாதமாக தொழில் செய்ய முடியவில்லை. எனவே எங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து அப்பகுதி மக்களுடன் கலந்தாய்வு செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலிஉயர்வு
திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் தலையில் காடா துணியை தலைப்பாகை கட்டியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருப்பூர், பல்லடம், கன்னம்பாளையம், அவினாசி, தெக்கலூர், மங்கலம், 63வேலம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். வேலை செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. ஆனால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி 7½ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசி கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.
Related Tags :
Next Story