கமலாலய குளத்தின் தென்கரை இடிந்து விழுந்தது
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் கமலாலய குளத்தின் தென்கரை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்;
திருவாரூரில் பெய்த பலத்த மழையால் கமலாலய குளத்தின் தென்கரை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே பிரமாண்டமாக கமலாலய குளம் காட்சி அளிக்கிறது. 5 வேலி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் கமலாலய குளம் திருவாரூர் நகரை அழகுபடுத்தி வருகிறது.
இந்த குளத்தின் நடுவில் அமைந்துள்ள நாகநாதரை தரிசிக்க படகு வசதி உள்ளது. 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ள கமலாலய குளம் தோஷம் நீக்கும் புண்ணிய தீர்த்தமாக திகழ்கிறது.
வாகன போக்குவரத்து
கமலாலய குளத்தை சுற்றி உள்ள நான்கு கரைகளிலும் பிரதான சாலைகள் செல்கிறது. இந்த சாலை மயிலாடுதுறை, நன்னிலம், காரைக்கால் போன்ற பகுதிகளில் இருந்து தஞ்சை, மன்னார்குடி போன்ற பகுதிக்கு செல்வதற்கான வழிப்பாதையாக அமைந்துள்ளது.
இதனால் கமலாலய குள கரைகளில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிக அளவு இருக்கும். குறிப்பாக கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து அதிகபாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் குளத்தின் கரை வழியாக செல்வது வழக்கம்.
கனரக வாகனங்களுக்கு தடை
இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த பலத்த மழையில் கமலாலய குளத்தின் வடகரை பகுதி இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மேல்கரை பகுதியும் இடிந்தது. இதனால் குளக்கரை சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் குளத்தின் கரைகள் சீரமைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், வர்த்தகர்கள் நலன் கருதி திருவாரூர்-மருத்துவக்கல்லூரி செல்லும் டவுன் பஸ் மட்டுமே கமலாலய குளம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இடிந்து விழுந்தது
இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் தற்போது தொடர்ந்து இரவு நேரங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அதிகாலை 3.30 மணிக்கு திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரையில் 100 மீட்டர் தூரம் உள்ள தடுப்பு சுவர் முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
குளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு நடப்பட்டிருந்த மின் கம்பமும் சேதமடைந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தின் தென்கரை சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் மக்கள் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
மின்வாரியத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று மின் வினியோகத்தை சீரமைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், நாகை செல்வராஜ் எம்.பி. ஆகியோர் இடிந்து விழுந்த குளத்தின் கரை பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் கூறும்போது, பருவ மழையால் இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் கரையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் நிரந்த தீர்வு காணும் விதமாகவும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story