அவினாசியில் 76 மில்லி மீட்டர் மழைப்பதிவு


அவினாசியில் 76 மில்லி மீட்டர் மழைப்பதிவு
x
தினத்தந்தி 25 Oct 2021 11:40 PM IST (Updated: 25 Oct 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

பலத்த சூறாவளி காற்றுடன் அவினாசியில் 76 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. திருப்பூரில் பள்ளி வளாகத்தில் மரம் வேருடன் சாய்ந்தது.

திருப்பூர்
 பலத்த சூறாவளி காற்றுடன் அவினாசியில் 76 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. திருப்பூரில் பள்ளி வளாகத்தில் மரம் வேருடன் சாய்ந்தது. 
தொடர் மழை 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நேற்று முன்தினமும் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் மழையுடன் காற்றும் வேகமாக வீசியது. அதன்படி நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழை அளவு வருமாறு:-
அதன்படி திருப்பூர் வடக்கு பகுதியில் 61 மில்லி மீட்டரும், அவினாசியில் 76 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 2 மில்லி மீட்டரும், ஊத்துக்குளியில் 7 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 6.20 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 26 மில்லி மீட்டரும், மூலனூரில் 2 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 18 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.  திருமூர்த்தி அணைப்பகுதியில் 1 மில்லி மீட்டரும், உடுமலையில் 3.40 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 3 மில்லி மீட்டரும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 30 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை நீர்பிடிப்பு பகுதியில் 1 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 1 மில்லி மீட்டரும், கலெக்டர் கேம்ப் ஆபிஸ் பகுதியில் 59.80 மில்லி மீட்டரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 297.40 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 17.49 மில்லி மீட்டர் ஆகும். 
மரம் வேருடன் சாய்ந்தது 
திருப்பூர் மாநகரில் பெய்த மழையின் காரணமாக கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும், காற்று வேகமாக வீசியதன் காரணமாக சந்திரகாவி மாநகராட்சி பள்ளியில்  மரம் ஒன்று நேற்று முன்தினம் இரவு வேருடன் சாய்ந்து விழுந்தது. 
அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை பள்ளி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மரத்தை அகற்றும் பணியும் நடந்தது. 

Next Story