ஒரத்தநாடு அருகே சினிமா பாணியில் இளம் பெண்ணை கடத்திச்சென்று கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


ஒரத்தநாடு அருகே சினிமா பாணியில் இளம் பெண்ணை கடத்திச்சென்று கட்டாய தாலி கட்டிய வாலிபர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Oct 2021 1:06 AM IST (Updated: 26 Oct 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கட்டாய தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு:-

ஒரத்தநாடு அருகே சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்திச்சென்று கட்டாய தாலி கட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

இளம்பெண் கடத்தல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை கோவிலுக்கு புறப்பட்டு சென்ற அந்த இளம்பெண்ணை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றது. இதுகுறித்து இளம் பெண்ணின் சித்தி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காதலனுக்கு வீடியோ கால்

இந்த நிலையில் 23-ந் தேதி இரவு இளம்பெண் தனது காதலனுக்கு அவரது செல்போனில் இருந்து பதற்றத்துடன் வீடியோ காலில் பேசினார். அப்போது, தன்னை காடுகள் சூழ்ந்த ஒரு கோவிலில் சிலர் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் தனக்கு கட்டாய தாலி கட்ட ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறி கதறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு ஓடிச்சென்று தனது காதலிக்கு கட்டாய திருமணம் செய்ய சிலர் முயற்சிப்பதாகவும், இதை தனது காதலி வீடியோ கால் மூலமாக கூறியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீட்டனர்

அதன்பேரில் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த், ஏட்டுக்கள் சரவணன், தமிழ்ச்செல்வன், குமார் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கடத்தப்பட்ட இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பது போலீசுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

வலுக்கட்டாய தாலி கட்டியவர் கைது

பிறகு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெண்ணை தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டை அடுத்துள்ள நெம்மேலி திப்பியக்குடியை சேர்ந்த தனபால், திருவோணத்தை அடுத்துள்ள புதுவிடுதியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கடத்தி சென்றதும், பிறகு வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோவிலில் வைத்து அவருக்கு புதுவிடுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் உத்திராபதி (வயது 34) என்பவர் வலுக்கட்டாயமாக தாலி கட்டி, அந்த பெண்ணை கறம்பக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணிற்கு கட்டாய தாலி கட்டிய உத்திராபதியை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தனபால், சிவகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் இளம்பெண்ணை கடத்தி சென்று கட்டாயமாக தாலி கட்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலன் திருமணம் செய்து கொண்டார்

கடத்தப்பட்ட இளம்பெண்ணை விரைவாக செயல்பட்டு மீட்ட போலீசாருக்கு இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மீட்கப்பட்ட இளம் பெண்ணை அவரது காதலன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒரத்தநாட்டில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story