அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Oct 2021 1:25 AM IST (Updated: 26 Oct 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு அருகே கிராவல் மண் அள்ளியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

துவரங்குறிச்சி, அக்.26-
வளநாடு அருகே கிராவல் மண் அள்ளியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர். இவர் மணப்பாறை அருகே கல்லாமேடு பகுதியில் தனது மகள் மோகனா பெயரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உரிமம் பெற்றார்.
மேலும் அந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த இடத்தில் மண்ணை கொட்டி மேடாக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதற்காக வளநாடு அருகே சொரியம்பட்டியில் உள்ள தனியார் நிலத்திலிருந்து நேற்று கிராவல் மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அனுமதியின்றி எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மண்அள்ளிக்கொண்டிருந்த 2 பொக்லைன் எந்திரன், 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். இதையறிந்த அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து வாகனங்கள் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  போலீசார் குவிக்கப்பட்டனர்..
 முன்னாள் எம்.எல்.ஏ.மீது வழக்கு
போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் வளநாடு போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. இது தொடர்பாக பொக்லைன் எந்திரத்தின் உரிமையாளரான முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகர்,  லாரி உரிமையாளர்கள் மகேந்திரன், சுரேஷ், ஆறுமுகம், டிரைவர்கள் ஆறுமுகம் (வயது 38), கண்ணன் (50), பன்னீர்செல்வம் (21), செல்வராஜ் (23) மற்றும் பதிவு எண் இல்லாத பொக்லைன் எந்திரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4 பேர் கைது
இதில் டிரைவர்களான ஆறுமுகம், கண்ணன், பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story