நெல்லையில் பலத்த மழை; மூலைக்கரைப்பட்டியில் மின்னல் தாக்கி தொழிலாளி சாவு


நெல்லையில் பலத்த மழை; மூலைக்கரைப்பட்டியில் மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2021 1:56 AM IST (Updated: 26 Oct 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பலத்த மழை பெய்தது. மூலைக்கரைப்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி தொழிலாளி இறந்தார்.

நெல்லை:
நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. மூலைக்கரைப்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பலத்த மழை

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை கடும் வெயில் அடித்தது. 2 மணி அளவில் வானம்  மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலை 3 மணிக்கு நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கலெக்டர் அலுவலக பகுதி, நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் தரைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. நெல்ைல டவுன் வழுக்கோடை முதல் ஆர்ச் வரை சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

மின்னல் தாக்கி தொழிலாளி சாவு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நொச்சிகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 49). இவர் சொந்தமாக ஆடு வைத்து மேய்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அனுமார் புதுக்குளம் வயல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது திடீரென்று சுடலை மீது மின்னல் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுடலை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிராம உதவியாளர் நடராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
மின்னல் தாக்கி உயிரிழந்த சுடலைக்கு சுடலி (46) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

பாளையங்கோட்டை அரியகுளம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வீரபத்திரன் என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த வீரபுத்திரன் மீது ஓடுகள் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

Next Story