கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் முழுஅடைப்பு


கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் முழுஅடைப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 2:06 AM IST (Updated: 26 Oct 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

தனி போலீஸ் மாவட்ட அந்தஸ்து ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. மேலும் கடைகள் அடைக்கப்பட்டன.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல்

கர்நாடக கோலார் தங்கவயலில் தங்க சுரங்கம் ெசயல்பட்டபோது பாதுகாப்பு பணிக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். கா்நாடக மாநிலத்திலேயே, தாலுகாவுக்கு போலீஸ் மாவட்ட அந்தஸ்து கோலார் தங்கவயலுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தங்கவயலில் இருப்பதால், அந்தப்பகுதி மக்கள் நிம்மதியாக இருப்பதுடன், இந்த சிறப்பு அந்தஸ்தால் ெபருமையும் அடைந்துள்ளனர். 

ஆங்கிலேயர்கள் காலத்துக்கு பிறகும் தங்கவயலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கோலார் தங்கவயல், பங்காருபேட்டை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி இந்த போலீஸ் மாவட்டம் செயல்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கோலார் தங்கவயல் தனி போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தங்கவயல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கவயல் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். 

மக்கள் கண்டனம்

மேலும் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர், தங்கவயல் போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதன்பிறகு போலீஸ் மாவட்ட அந்தஸ்து ரத்து பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றிய போலீசார், ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தங்கவயல் மக்களுக்கும் மேலும் ஒரு இடியை போல இறங்கியது. மேலும் மாநில அரசின் இந்த முடிவுக்கு தங்கவயல், பங்காருபேட்டை மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

முழுஅடைப்பு

இந்த நிலையில் தனி போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25-ந்தேதி (அதாவது நேற்று) கோலார் தங்கவயல், பங்காருபேட்டை பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), அ.தி.மு.க., தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சங்கம், வக்கீல்கள் சங்கம், தமிழ் மற்றும் கன்னட அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அழைப்பு விடுத்திருந்தனர். 

அதன்படி நேற்று கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை வியாபாரிகள் யாரும் கடைகளை திறக்கவில்லை. வணிக நிறுவனங்கள், வங்கிகள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. 

வெறிச்சோடின

மேலும் தங்கவயல், பங்காருபேட்டை பகுதிகளில் நேற்று காலை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை. 2 பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், முக்கிய பகுதிகள் மக்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தங்கவயல், பங்காருபேட்டை பஸ் நிலையங்களும் பஸ்கள் மற்றும் பயணிகள் இன்றி வெறிச்சோடின. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தங்கவயல் மார்க்கெட்டும் நேற்று மூடப்பட்டு ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. 

பி.இ.எம்.எல். தொழிற்சாலை தொழிலாளர்களும் பணிக்கு செல்லவில்லை. அரசு அலுவலகங்கள்  திறந்திருந்தாலும் மக்கள் யாரும் செல்லாததால் அலுவலகம் வெறிச்சோடின. தங்கவயல் கோர்ட்டில் நேற்று வழக்குகளும் நடக்கவில்லை. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு தங்கவயல், பங்காருபேட்டை பகுதி மக்கள் தங்கள் முழு ஆதரவை வழங்கி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். 

அசம்பாவித சம்பவங்கள் இன்றி...

இதற்கிடையே தங்கவயல் பைவ் லைட்ஸ் பகுதியில் தலித் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கவயல் போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது. போலீஸ் மாவட்ட அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால் தங்கவயல், பங்காருபேட்டை மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்க வேண்டும். இந்த முழுஅடைப்பு போராட்டம் குறித்து கோலார் எம்.பி. முனிசாமி தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். 

இதேபோல தங்கவயல் காந்தி சிலை முன்பும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலார் தங்கவயல், பங்காருபேட்டை பகுதிகளில் நடந்த முழுஅடைப்பு போராட்டம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி வெற்றிகரமாக நடந்தது. மாலை 5 மணிக்கு பிறகு தங்கவயல், பங்காருபேட்டையில் இயல்பு நிலை திரும்பியது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் இயங்கின.

Next Story