புளியரை பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்- குறை தீர்க்கும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை


புளியரை பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்- குறை தீர்க்கும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Oct 2021 2:09 AM IST (Updated: 26 Oct 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

புளியரை பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தென்காசி:
புளியரை பஞ்சாயத்து  துணைத்தலைவர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. 
பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் 13-வது வார்டு ஜவகர் காலனி தெருவில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சாதிச்சான்று

பூர்வீக மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் இசைவாணன் கொடுத்துள்ள மனுவில், “சலவை செய்தல், முடி திருத்தம் செய்தல், இறுதிச்சடங்கு கழித்தல் மற்றும் இதர கூலி வேலைகள் செய்யும் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். புதிரை வண்ணார் சாதிச்சான்று வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்கிறார்கள். அதனை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தென்காசி நகர தலைவர் அபாபீல் மைதீன் கொடுத்துள்ள மனுவில், “தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பூங்கா, அண்ணா நகர் பூங்கா ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
சுரண்டை சிவகுருநாதபுரம் 17-வது வார்டு பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், “குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் பணி நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த வேண்டும்

புளியரை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சரவணன், வள்ளியம்மாள், நாராயணன், சகாயமேரி, கனகா, கருப்பசாமி, முருகன், முத்துமாரி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், “நாங்கள் புளியரை பஞ்சாயத்து கவுன்சிலர்கள். கடந்த 22-ந் தேதி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரவணனுக்கு ஆதரவாக அலுவலகத்திற்குள் நுழையும்போது, மற்றொரு வார்டு உறுப்பினர் உள்ளிட்டவர்கள் எங்களை தடுத்து நிறுத்தி பெண் கவுன்சிலரை அவமானப்படுத்தியும், எங்களை அச்சுறுத்தியும் கொலை மிரட்டல் விடுத்து தேர்தலை நடத்த விடாமல் செய்துவிட்டனர். எனவே அந்த தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அவ்வாறு நடக்கும்போது தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கேட்டு மனு வழங்கிய சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற  பெண்ணுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Next Story