கர்நாடகத்தில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்


கர்நாடகத்தில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Oct 2021 2:12 AM IST (Updated: 26 Oct 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உள்ள அனைத்து விதமான வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்கவும் விதமாக புதிய சட்ட மசோதாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார்.

பெங்களூரு:

மைசூருவில் கோவில் இடிப்பு

  நாடு முழுவதும் பொது இடங்களில் இருக்கும் கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை இடித்து அகற்றுவதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், பிற ஆலயங்கள், மசூதிகள் பற்றி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

  அதன்படி, ஆயிரக்கணக்கான வழிபாட்டு தலங்கள் பொது இடங்களில் இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் மைசூருவில் பொது இடத்தில் கட்டப்பட்டு இருந்த ஒரு கோவிலை மைசூரு மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்றியது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவிலை இடித்து அகற்றியதற்கு ஆளும் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சட்ட மசோதாவுக்கு அனுமதி

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் கோவில்களை இடித்து அகற்ற கூடாது என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அவர், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தி இருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் பொது இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் தெரிவித்திருந்தார்.

  இதையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்கும் விதமாக 20121-ம் ஆண்டுக்கான புதிய சட்ட மசோதாவை அரசு உருவாக்கியது. அந்த சட்ட மசோதா, கடந்த சட்டசசை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்த புதிய சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கும்படி கோரி, அதனை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு மாநில அரசு அனுப்பி வைத்திருந்தது.

பாதுகாப்பாக இருக்கும்

  இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை (கோவில்கள், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்கள்) பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்கி இருப்பதன் மூலம் மாநிலத்தில் பொது இடங்களில் இருக்கும் வழிபாட்டு தலங்களை அகற்றுவதற்கு எந்த விதமான சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், அந்த வழிபாட்டு தலங்கள் கர்நாடக சட்டத்தின்படி பாதுகாப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் ஏதாவது ஒரு வழிபாட்டு தலத்தை அகற்றுவது தொடர்பாக, இதற்கு முன்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு முடியும் தருவாயில் இருந்தால், அந்த வழிபாட்டு தலத்தை இந்த புதிய சட்ட மசோதா மூலமாக பாதுகாக்க முடியாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட மசோதா மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இடித்து அகற்ற முடியாதபடி பாதுகாப்பாக இருக்கும்.

அரசின் உத்தரவு மீறினால்...

  ஆனால் பொது இடங்களில் கட்டப்பட்டு இருக்கும் வழிபாட்டு தலங்கள், ஏற்கனவே பிறப்பித்திருந்த அரசின் உத்தரவுகள், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்தால், அவற்றை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டால், அகற்றப்படும்.

  அதே நேரத்தில் இந்த புதிய சட்ட மசோதா மூலமாக பொது இடங்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏதோவது ஒரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டு இருந்தால், அந்த வழிபாட்டு தலத்தை இடித்து அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டாலும், அகற்ற முடியாமல் பாதுகாப்பாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story