லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
தென்காசி அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தென்காசி:
தென்காசி அருேக லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். நண்பரின் நிச்சயதார்த்தத்திற்கு சென்று திரும்பியபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பெயிண்டு அடிக்கும் தொழிலாளர்கள்
தென்காசி மேலப்புலியூர் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுந்தர் (வயது 38). இவரது நண்பர் தென்காசி கீழ முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (40). இவர்கள் 2 பேரும் பெயிண்டு அடிக்கும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் தென்காசி அருகே உள்ள கண்டமங்கலத்தில் இவர்களின் நண்பரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 2 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
2 பேர் பலி
பின்னர் அங்கிருந்து மதியம் சுந்தர், அருணாசலம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கண்டமங்கலத்தில் இருந்து தென்காசி சாலையில் வந்தபோது, எதிரே மணல் லோடு ஏற்றிச் சென்ற லாரி வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கிய சுந்தர், அருணாசலம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பம்
விபத்தில் இறந்த சுந்தருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அருணாசலத்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
தென்காசி அருேக லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story