பெங்களூருவில் விபத்தில் சிக்கிய தாய்-மகனை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்; இருவருமே உயிரிழந்த பரிதாபம்
விபத்தில் சிக்கிய தாய்-மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த மனிதாபிமானமற்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு:
தர்மபுரி தம்பதி
தமிழ்நாடு தர்மபுரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 21). இந்த தம்பதிக்கு தீக்ஷித் என்ற ஒரு வயது குழந்தை இருந்தது. பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் சிவக்குமார் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். மேலும் சிவக்குமார் அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சிவக்குமார் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கே.ஆர்.புரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். மாரத்தஹள்ளி ரிங் ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சிவக்குமார், ஸ்ரீதேவி, குழந்தை தீக்ஷித் தவறி கீழே விழுந்தனர்.
குழந்தை-தாய் சாவு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதேவி, தீக்ஷித் உயிருக்கு போராடினார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் மனைவி, குழந்தையை மடியில் போட்டு கொண்டு காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள்... என்று கதறினார். ஆனால் ஸ்ரீதேவி, குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சிலர் ஸ்ரீதேவி, தீக்ஷித் உயிருக்கு போராடுவதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சிறிது நேரத்தில் ஸ்ரீதேவியும், தீக்ஷித்தும் பரிதாபமாக இறந்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து சிவக்குமார் கதறி அழுதார். இது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் எச்.ஏ.எல். போக்குவரத்து போலீசார் அங்கு சென்று ஸ்ரீதேவி, தீக்ஷித் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிவக்குமாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய தாய்-மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் ெசல்போனில் வீடியோ எடுத்த மனிதாபிமானமற்ற சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story