கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் 20 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2-ந்தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு முழுநேர வகுப்புகள் தொடங்குகிறது.
பெங்களூரு:
1 முதல் 5-ம் வகுப்பு
கர்நாடகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க அரசு தயக்கம் காட்டி வந்தது. மேலும் தொடக்கப்பள்ளிகளை திறப்பது குறித்து சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
பின்னர் நிபுணர்கள் குழுவினர் பரிந்துரைப்படி கர்நாடக மாநிலம் முழுவதும் அக்டோபர் 25-ந் தேதி முதல் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் அறிவித்திருந்தார். மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், கொரோனா காரணமாகவும், அதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் மேற்கொண்டது.
பள்ளிகள் திறப்பு
அதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசு அறிவித்தபடி நேற்று தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக தொடக்க பள்ளிகள் 20 மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் நேற்று ஆர்வமுடன் தங்களது பெற்றோருடன் வருகை தந்தனர்.
பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அனுமதி கடிதத்துடன் மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். அவ்வாறு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்று அழைத்து சென்றார்கள்.
பூக்களால் பாதை
குறிப்பாக பெரும்பாலான பள்ளிகள் மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக முன்பக்க நுழைவு வாயில் பகுதியில் அலங்கார தோரணம் கட்டி இருந்தார்கள். சில பள்ளிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளை
ஆசிரியர்கள் நுழைவு வாயில் பகுதிக்கே வந்து உற்சாகமாக உள்ளே அழைத்து செல்வதை பார்க்க முடிந்தது. சில பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் பூக்களை தூவி வரவேற்றனர்.
ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை பூக்கள் தூவி வரவேற்ற ஆசிரியைகள், நுழைவு வாயிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் பாதை வரை பூக்களை போட்டு வைத்திருந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அந்த பூக்கள் மீது நடந்து சென்றனர். மாணவ, மாணவிகளும் 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகமாக வருகை தந்தனர். ஆன்லைனில் செல்போனில் தங்களது ஆசிரியர்களை பார்த்து வந்த மாணவர்கள் நேற்று நேரில் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார்கள்.
50 சதவீத மாணவர்கள்
1 முதல் 5-ம் வகுப்பு வரையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத மாணவ, மாணவிகளே வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். மாணவர்களுக்கு வருகை பதிவு கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆன்லைன் மூலமாக தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.அதாவது ஆன்லைன் மற்றும் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து மாணவ, மாணவிகள் படித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா காரணமாக மதியம் வரை மட்டுமே பள்ளிகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவ, மாணவிகளின் நலன் கருதி 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ள ஆசிரியா்கள் மட்டுமே பணிக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
2-ந்தேதி முதல் முழுநேர வகுப்புகள்
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று கர்நாடகத்தில் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை. மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மதியம் வரை திறக்கப்படும் தொடக்க பள்ளிகள், அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதியில் இருந்து எப்போதும் போல் முழு நேரமாக திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு முழு நேரமாக பள்ளிகள் திறக்கப்பட்டால், மதிய உணவும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
கொரோனா விதிகள் கடைப்பிடிப்பு
கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாலும், கொரோனா பீதி குறைந்துள்ள காரணத்தாலும், பெற்றோரும் தங்களது பிள்ளைகளை எந்த ஒரு தயக்கமும் இன்றி பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திருந்தனர். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. அனைத்து தொடக்க பள்ளிகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.
மாணவர்கள் அமரும் இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மாணவ, மாணவிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். பள்ளிக்கு வந்த மாணவர்களின் கையில் கிருமி நாசினி தெளித்தும், அவர்களது உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும் ஆசிரியர்கள், அவர்களை வரவேற்று அழைத்து சென்றார்கள். ஒரு இருக்கையில் 2 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story