இளம்பிள்ளை அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது-கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல்


இளம்பிள்ளை அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது-கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Oct 2021 3:38 AM IST (Updated: 26 Oct 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளநோட்டு
சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை பகுதியில் மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம்பிடித்தனர்.
3 பேர் பிடிபட்டனர்
இதைப்பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தப்பகுட்டை பகுதியை சேர்ந்த பொன்னுவேல் (வயது 52), தெசவிளக்கு பகுதியை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள்  கள்ளநோட்டை அங்குள்ள ஒரு கடையில் மாற்ற முயன்றதும் தெரிந்தது. சங்ககிரி உலக்கசின்னானூர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி (29) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சின்னதம்பியை மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தப்பக்குட்டை பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக  வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட பொன்னுவேல், சதீஷ், சின்னதம்பி ஆகியோரை பிடித்துள்ளோம். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சின்னதம்பி  சேலத்தில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை வாங்கி வந்து அதில் கள்ளநோட்டுகளை நகல் எடுத்து, சதீஷ், பொன்னுவேல் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சின்னதம்பி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டுகள் நகல் எடுத்து கொடுத்துள்ளார்.
எந்திரம் பறிமுதல்
மேலும் அந்த கள்ளநோட்டுகளை மதுக்கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் கொடுத்து மாற்றி உள்ளனர். எந்த பகுதிகளில் அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.  மேலும் தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளனர். தற்போது அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து42 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும், கலர் ஜெராக்ஸ் எந்திரம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னதம்பி, சதீஷ், பொன்னுவேல் ஆகியோரை கைது செய்தனர். மேலும்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story