தாரமங்கலத்தில் மாயமான கார் டிரைவர் அடித்துக்கொலை-கர்நாடகாவில் உடல் மீட்பு
தாரமங்கலத்தில் மாயமான கார் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் கர்நாடகாவில் மீட்கப்பட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலத்தில் மாயமான கார் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் கர்நாடகாவில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கார் டிரைவர் மாயம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). கார் டிரைவரான இவர் சொந்தமாக கார் வைத்துக்கொண்டு வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
ரமேஷ் கடந்த 16-ந் தேதி கார் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி வெண்ணிலா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார் டிரைவர் ரமேசை தேடி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் ரமேசை கண்டுபிடித்து தரக்கோரி அவருடைய உறவினர்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் நெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரமேஷ் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து தாரமங்கலம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?, அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்தும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரமேசின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாரமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story