அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை:அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை-ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை:அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை-ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2021 3:38 AM IST (Updated: 26 Oct 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

சேலம்:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
தொழிற்சங்க பேரவை
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் புதிதாக தீரன் தொழிற்சங்க பேரவை பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு தொழிற்சங்க பேரவையின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக போக்குவரத்து துறையில் நிறைய காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்த காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, கடந்த 10 ஆண்டுகளாக பல வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழித்தடங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்க வழிவகை செய்ய வேண்டும்..
ஊழல் புகார்
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்ததால் அவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடந்து வருகிறது. சரியான முகாந்திரம் இருந்தால், அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு தரப்பில்  கோப்புகள் ஆய்வு செய்த பின்னரே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. மடியில் கனமில்லை என்றால் நிரூபிக்க வேண்டும்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரே கவர்னரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்கள். ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டால் அது சம்பந்தமாக விசாரிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது.
நாகரீகத்தை மீறி  பேசக்கூடாது
பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, குற்றச்சாட்டுகளை நாகரீகமாக எடுத்து சொல்ல வேண்டும். அதை விடுத்து நாகரீகத்தை மீறி பேசக்கூடாது. கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக அறிவித்து அவர் நிறைவேற்றி வருகிறார். 
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story