சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்


சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Oct 2021 3:38 AM IST (Updated: 26 Oct 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் முதல்கட்டாக 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

சேலம்:
சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் முதல்கட்டாக 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மின் இணைப்பு
சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சேலம் மற்றும் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார். பின்னர் அவர், மின்வாரியத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 21 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து, சென்னையில் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணையை வழங்கினார். அந்த வகையில் சேலம், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 50 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்த விவசாயிகளுக்கும் விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இது விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். இலவச மின் இணைப்புகளை பெறும் விவசாயிகள் மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் சண்முகம், தண்டபாணி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story