கடலில் மூழ்கி பலியான மாணவர் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு


கடலில் மூழ்கி பலியான மாணவர் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 3:47 AM IST (Updated: 26 Oct 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரங்கால் பொழிமுகத்தில் கடலில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர் உடல் 4 நாட்களுக்கு பிறகு சின்னமுட்டம் கடலில் மீட்கப்பட்டது.

ராஜாக்கமங்கலம்: 
ஆயிரங்கால் பொழிமுகத்தில் கடலில் மூழ்கி பலியான கல்லூரி மாணவர் உடல் 4 நாட்களுக்கு பிறகு சின்னமுட்டம் கடலில் மீட்கப்பட்டது. 
கல்லூரி மாணவர்
ஈத்தாமொழியை அடுத்த இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், கொத்தனார். இவருடைய மகன் மது (வயது 19). இவர், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 
கடந்த 22-ந்தேதி காலையில் மது தனது கல்லூரி நண்பர்களான நித்யானந்தம், நீலகண்டன், கவின் ஆகியோருடன் கணபதிபுரம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றார். 
நண்பர்கள் 4 பேரும் அந்த பகுதியை சுற்றி பார்த்தனர். பின்னர், நீலகண்டனும், கவினும் அங்கிருந்து சென்று விட்டனர். மதுவும், நித்யானந்தமும் கடலில் குளிக்க இறங்கினர். 
ராட்சத அலையில் சிக்கினார்
அவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலை மதுவை கடலுக்குள் இழுத்து சென்றது. இதைப்பார்த்த நித்யானந்தம் நண்பரை காப்பாற்ற முயன்றார். அதற்குள் மது கடலுக்குள் மூழ்கினார். 
பின்னர், இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசாருக்கும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், நம்பியார் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கடலில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
பிணமாக மீட்பு
இந்தநிலையில் நேற்று 4-வது நாளாக மாணவரை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டனர். அப்போது  சின்னமுட்டத்தில் இருந்து 7 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மாணவர் மதுவின் உடல் மிதப்பதை கண்டனர். இதையடுத்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த மாணவரின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பருடன் கடலில் குளித்த மாணவர் ராட்சத அலையில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story