சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ‘லேப் டெக்னீசியன்கள்’ ஆர்ப்பாட்டம்


சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ‘லேப் டெக்னீசியன்கள்’ ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 9:44 AM IST (Updated: 26 Oct 2021 9:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ‘லேப் டெக்னீசியன்கள்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை,

அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள ‘லேப் டெக்னீசியன்’ நிலை 2 பணியிடங்களை நிரப்பக்கோரி நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டிப்ளமோ லேப் டெக்னீசியன் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.ஜெயபாரதி கூறியதாவது:-

அரசு மருத்துவ கல்லூரிகளில் லேப் டெக்னீசியன் பட்டப்படிப்பு முடித்த சுமார் 20 ஆயிரம் பேர் இருக்கிறோம். லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்கள் நேரடி நியமனம் பெற்றவர்கள் வெறும் 524 பேர் மட்டுமே. பெரும்பாலான பணியிடங்கள் பதவி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டதால், நாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை கண்டறிந்து போர்கால அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

மேலும், 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் தோற்றுவிக்கப்பட்ட லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பாமல், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அதேபோல், ‘பாரா மெடிக்கல் கவுன்சிலை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story