நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் ரகளை... இளம்பெண்கள் கைது...!


நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் ரகளை... இளம்பெண்கள் கைது...!
x
தினத்தந்தி 26 Oct 2021 12:42 PM IST (Updated: 26 Oct 2021 12:42 PM IST)
t-max-icont-min-icon

கிண்டி கத்திப்பாராவில் நட்சத்திர ஓட்டலில் மது அருந்தும்போது இளம்பெண்கள் இடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சவுமியா (வயது 35). இவர், அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர், கிண்டி கத்திப்பாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு அருகில் மது அருந்தி கொண்டிருந்த ஆன்லைன் டிரேடிங் நடத்தி வரும் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீரா (32) என்பவர் செல்போனில் சத்தமாக பேசியதாக தெரிகிறது.

அதற்கு சவுமியா, “நாம் நட்சத்திர ஓட்டலில் மது குடித்து கொண்டிருக்கிறோம். கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்” என்றார். இதனால் ஆத்திரமடைந்த மீரா, சவுமியாவை தகாத வார்த்தையால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மோதலில் ஈடுபட்ட 2 இளம்பெண்களையும் நட்சத்திர ஓட்டல் ஊழியர்கள் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.

உடனடியாக பரங்கிமலை போலீசாருக்கு ஓட்டல் மேலாளர் தகவல் கொடுத்தார். நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து வந்த போலீசார், குடிபோதையில் ரகளை செய்த 2 இளம்பெண்களையும் கைது செய்தனர்.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான மீராவை சிறையில் அடைத்தனர். சவுமியா மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே குடிபோதையில் தகராறு செய்த வழக்கு இருப்பதால் அவரை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story