இஸ்ரேல் நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி
இஸ்ரேல் நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
இஸ்ரேல் நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
உரம் ஒதுக்கீடு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதல் உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினார். இந்த நிலையில் தமிழகத்துக்கு கூடுதல் உரம் ஒதுக்கீடு செய்யும் வகையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. சிவப்பு பொட்டாஷ் 16 ஆயிரம் டன் மற்றும் வெள்ளை பொட்டாஷ் 11 ஆயிரம் டன் ஆக மொத்தம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட உரம் இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு, 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக பேக்கிங் செய்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு பொட்டாஷ் 8 ஆயிரத்து 285 டன், வெள்ளை பொட்டாஷ் 351.100 டன் ஆக மொத்தம் 8636.100 மெட்ரிக் டன் உரம் இதுவரை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆந்திராவுக்கு வெள்ளை பொட்டாஷ் 1331.850 டன், கர்நாடகாவுக்கு சிவப்பு பொட்டாஷ் 1322.850 டன், வெள்ளை பொட்டாஷ் 1322.850 டன் ஆக மொத்தம் 2645.700 ் டன், கேரளாவுக்கு சிவப்பு பொட்டாஷ் 635.500 டன், வெள்ளை பொட்டாஷ் 696.350 மெட்ரிக் டன் என 1331.850 மெட்ரிக் டன் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை சிவப்பு பொட்டாஷ் 10243.350 டன், வெள்ளை பொட்டாஷ் 3702.150 டன் ஆக மொத்தம் 13945.500 டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு
தற்போது சிவப்பு பொட்டாஷ் 5756.650 டன், வெள்ளை பொட்டாஷ் 7297.850 டன் என மொத்தம் 13054.500 டன் உரம் மீதம் உள்ளது. அதனை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் உரம் சரியான அளவில் இருக்கிறதா என எடை போட்டு பரிசோதித்து பார்த்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர் பழனிவேலாயுதம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறும் போது, பொட்டாஷ் உரத்தை விவசாயிகள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு மேலுரமாக போடுவார்கள். கப்பல் மூலம் வந்துள்ள பொட்டாஷ் உரத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை 422 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உரத்தை 50 கிலோ மூட்டைகளாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சாலை வழியாக அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தட்டுபாடு இல்லாமல் உரம் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரத்தை மூட்டைகளில் அடைக்கும் பணிகளில் சுமார் 400 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலமாக தற்போது நிலவும் உர தட்டுப்பாடு மெல்ல மெல்ல சரிசெய்யப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story