குற்றவாளியின் அறிவிப்பு போஸ்டர் வெளியீடு
குற்றவாளியின் அறிவிப்பு போஸ்டர் வெளியீடு
கோத்தகிரி
குன்னூர் அருகே உள்ள சோகத்தொரை கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் அஜய் (வயது 21). இவர் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள மீன்கடையில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 17-ந்தேதி காலை பணிக்கு செல்வதாகக் கூறி விட்டு கோத்தகிரிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை கோத்தகிரி காந்தி மைதானம் அருகே உள்ள புயல் நிவாரணக்கூட கட்டிடம் அருகில் முகத்தில் பலத்தக் காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனும் காணாமல் போயிருந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன அஜய் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் இரவில் சுற்றித் திரிந்ததும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.
மேலும் அவரது நண்பரான கட்டபெட்டு அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சந்திர மோகன் என்பவரது மகன் தீபன் குமார் என்கிற விக்கி (19) என்பவர் சம்பவம் நடந்த அதே நாளில் இறந்து போன அஜய்யின் மோட்டார் சைக்கிளை ஒட்டிக் கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக சமவெளிப் பகுதிக்குச் செல்லும் காட்சி சோதனைச் சாவடி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் தீபன் குமாரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அவரது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு போஸ்டரை காவல் நிலையத்தில் ஒட்டி வைதுள்ளதுடன், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளனர். மேலும் அவரை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story