கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு; 4 சோதனை சாவடிகளிலும் போலீஸ் குவிப்பு


கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு; 4 சோதனை சாவடிகளிலும் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 10:08 PM IST (Updated: 26 Oct 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிப்பதற்கு 4 சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திண்டுக்கல்:
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிப்பதற்கு 4 சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கொடைக்கானல்
கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பயணிகளும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கார், வேன்களில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலை, பழனி-கொடைக்கானல் சாலை ஆகியவை வழியாக செல்கின்றனர்.
ஒரு சிலர் சித்தரேவு வழியாகவும் கொடைக்கானலுக்கு வருகின்றனர். எனவே, அந்த 3 பாதைகளிலும் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு தாண்டிக்குடி அருகே பள்ளத்தாக்கில் உடல் வீசப்பட்டு கிடந்தது. இதுபற்றி தாண்டிக்குடி போலீசார் துப்புதுலக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.
போலீஸ் குவிப்பு 
இதேபோல் மேலும் சம்பவங்கள் நடைபெறாத வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். இதையடுத்து வத்தலக்குண்டு-கொடைக்கானல், பழனி-கொடைக்கானல், சித்தரேவு ஆகிய பகுதிகளில் உள்ள 3 சோதனை சாவடிகளிலும் தலா 5 போலீசார் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு வருவதற்கு ஒரு பாதை உள்ளது. அந்த பாதையில் சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். எனினும் அங்கும் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த 4 சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனை நடத்தப்படுகின்றன. மேலும் வாகன பதிவு எண் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Next Story