விஷம் குடித்து மனைவி, மகன் தற்கொலை: தொழில் அதிபரும் பரிதாப சாவு


விஷம் குடித்து மனைவி, மகன் தற்கொலை: தொழில் அதிபரும் பரிதாப சாவு
x
தினத்தந்தி 26 Oct 2021 10:23 PM IST (Updated: 26 Oct 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் தொழில் நஷ்டம் காரணமாக விஷம் குடித்து மனைவி, மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தொழில் அதிபரும் பலியானார்.

பரமத்திவேலூர்:
தொழிலில் நஷ்டம்
பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் சையத் அக்பர் (வயது 60). தொழில் அதிபர். இவருடைய மனைவி பாத்திமாபேகம் (55). இந்த தம்பதிக்கு சிக்கந்தர் (33), பர்கத் (30) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் சிக்கந்தர் லண்டனில் வேலை பார்த்து வருகிறார். 
சையத் அக்பர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு வெங்காய மண்டி தொழிலை தொடங்கினார். ஆனால் இந்த தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி-மகன் சாவு
இதனால் சையத் அக்பர் தனது மனைவி மற்றும் மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி அவர்கள் கடந்த 4-ந் தேதி வீட்டில் குளிர்பானத்தில், விஷம் கலந்து குடித்தனர். உயிருக்கு போராடிய அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாத்திமா பேகம், பர்கத் ஆகியோர் பலியாகினர். சையத் அக்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொழிலதிபரும் சாவு
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சையத் அக்பர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். 
இதையடுத்து பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரமத்திவேலூரில் விஷம் குடித்த சம்பவத்தில் மனைவி, மகன் பலியான நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தொழில் அதிபரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story