பா.ஜ.க. சார்பில் நிவாரண பொருட்கள்


பா.ஜ.க. சார்பில் நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 26 Oct 2021 10:37 PM IST (Updated: 26 Oct 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் இருந்து கேரளாவுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தேனி: 

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் தேனி, கோவை வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க.வினர் தேனி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்துக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து தேனி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து 3 சரக்கு வாகனங்களில் அரிசி, குடிநீர், பிரட், பிஸ்கட், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கேரள மாநிலத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் நிவாரண பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

அப்போது பொதுச்செயலாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், "ஒரே நாடு என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கேரளாவில் தற்போது நடப்பது கம்யூனிஸ்டு ஆட்சியாக இருந்தாலும் அதை பிரித்து பார்க்காமல் தேவையான உதவி செய்வோம். தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வும், கேரளாவில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியும் கேரள குறித்து கவலைப்படவில்லை. பா.ஜ.க. அப்படி இருக்காது. கேரளா மட்டுமின்றி எந்த மாநிலத்தில் பேரிடர் என்றாலும் உதவி செய்வோம்" என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, தேனி நகர தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story