கொரோனா சிகிச்சை மையத்தில் மின்விசிறிகள் திருட்டு
தேனி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் மின்விசிறிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தேனி :
தேனி அருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டியில் குடிசை மாற்று வாரியத்தின்கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் பயனாளிகளிடம் வழங்கப்படவில்லை. அந்த குடியிருப்புகள் கொரோனா 2-வது அலை காலக்கட்டத்தில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக பயன்படுத்தப்பட்டது. அங்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்ததால் சிகிச்சை மையம் தற்போது செயல்படவில்லை.
இந்த நிலையில் அந்த சிகிச்சை மையத்தை நேற்று முன்தினம் சுகாதார பணிகள் துணை இயக்குனா் ஜெகவீரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிகிச்சை மையத்தில் அறைகளில் பொருத்தப்பட்டு இருந்த 48 மின்விசிறிகள், 105 பல்புகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.94 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் துணை இயக்குனர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா சிகிச்சை மையத்தில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story