உள்ளாட்சித்துறை அமைப்புகள் பள்ளிகளை தூய்மை செய்ய வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு
வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் உள்ளாட்சித்துறை அமைப்புகள் பள்ளிகளை தூய்மை செய்ய வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை
வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் உள்ளாட்சித்துறை அமைப்புகள் பள்ளிகளை தூய்மை செய்ய வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தற்போது முதல்-அமைச்சர் வருகிற 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 619 தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் திறக்கப்படுகிறது.
ஏற்கனவே 120 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இணைந்துள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதுபோலவே 100 அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளும், 65 மெட்ரிக் பள்ளிகளும், 26 மற்ற பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தூய்மை செய்ய வேண்டும்
மாவட்டத்தில் 619 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக மற்றும் நகர பகுதிகளில் உள்ளாட்சி துறை அமைப்புகளான வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் தங்களுக்கான பகுதிகளில் உள்ள பள்ளிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வகுப்பறையில் குப்பைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் செடி கொடிகள் வளர்ந்து இருப்பதை அகற்றி தூய்மை செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி, கழிப்பறைகளை ஆய்வு செய்து, தண்ணீர் வசதியுடன் சுகாதார வசதிகளை முறையாக சரி செய்து கொடுக்க வேண்டும். வகுப்பறையில் மின்சார வசதி இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளிக்கட்டிடங்களில் உறுதி தன்மையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். ஏனென்றால் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும்.
மாணவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் பொழுது ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சூழல் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் தூய்மை பணிகளை விரைந்து முடித்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் அங்குலட்சுமி, முனி சுப்புராயன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story