தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Oct 2021 11:31 PM IST (Updated: 26 Oct 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-

குரங்குகள் அட்டகாசம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்திப்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆரோக்கிய மாதா பேராலய பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் பேராலயத்துக்கு வருபவர்களிடம் இருந்து உணவு பொருட்கள், செல்போன்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்களை பிடுங்கி செல்கின்றன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                         -ஜெயம், வேளாங்கண்ணி.


குடிநீர் தட்டுப்பாடு

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரபிடாகை வடக்கு கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. மேலும் விழுந்தமாங்குடி பகுதியில் உள்ள 2 கிணறுகள் மூலமும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கிணறுகள் தூர்வாரப்படாமல் உள்ளதால், காரபிடாகை கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவது தடைபட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                            -பொதுமக்கள்,காரபிடாகை வடக்கு கிராமம்.

சாலையை ஆக்கிரமிக்கும் மதுபிரியர்கள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் புதுத்தெரு பகுதியில் உள்ள சாலையை மதுபிரியர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.இதனால் பள்ளி, கல்லூரி -மாணவிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.குறிப்பாக மதுபிரியர்கள் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு மது குடிப்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டமாக நின்று மதுகுடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் 

திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி பகுதியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் சாலையில் வரும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                 -பொதுமக்கள், திருவாரூர்.

மயான கொட்டகை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே அரிச்சந்திரபுரம் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயான கொட்டகை சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாக மயான கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன. இதனால் கொட்டும் மழையிலும், வெயிலிலும் இறுதி சடங்கு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மயான கொட்டகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மயான கொட்டகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                  -சிரஞ்சீவி, அரிச்சந்திரபுரம்.
சேறும், சகதியுமான சாலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த மேனாங்குடி ஊராட்சி பேட்டைபாலூர் பகுதியில் உள்ள கீழத்தெருவில் இருந்து அம்பகரத்தூர் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அம்பகரத்தூர் பகுதிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை பராமரிப்பின்றி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                                        -சுரேஷ்குமார், நன்னிலம்.
                          

Next Story