காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
தீவிர கண்காணிப்பு
இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோர பகுதிகளில் கவிழ்த்து போடப்பட்டுள்ளன. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதலைப்பண்ணை, மணல் திட்டு, ஆலாம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார், ஒலிப்பெருக்கி மூலம் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story