உழவு பணியின்போது கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த டிரைவர்


உழவு பணியின்போது கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த டிரைவர்
x
தினத்தந்தி 27 Oct 2021 1:38 AM IST (Updated: 27 Oct 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

உழவு பணியின்போது கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்த டிரைவர் மீட்கப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

கிணற்றில் டிராக்டருடன் விழுந்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் டிராக்டர் மூலம் வாடகைக்கு உழவு செய்யும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தரைக்கிணறு வெட்டி, 20 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இருந்து நீரை இறைத்து கடலை, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்த நிலத்தில் கடலை விதைப்பு செய்வதற்காக, நேற்று உழவு செய்யும் பணியை தட்சிணாமூர்த்தி மேற்கொண்டார். இதில் தட்சிணாமூர்த்தி டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் கரையோரம் தரை தளத்தில் புற்கள் மண்டி இருந்ததால் கிணறு இருப்பதை அறியாமல் தட்சிணாமூர்த்தி அந்த வழியாக டிராக்டரை ஓட்டியபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்தார்.
மீட்டனர்
இதில் தட்சிணாமூர்த்தி டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டார். அருகில் இருந்த மணியின் மனைவி, அதை பார்த்து சத்தம்போட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்தார். மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றில் இருந்து தட்சிணாமூர்த்தியை மீட்டனர். அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கிணற்றில் விழுந்த டிராக்டரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். டிராக்டருடன் டிரைவர் தரை கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் வாரியங்காவல் இலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story